செங்கலடி நகர அபிவிருத்திக்கு விசேட குழுக் கூட்டம் அவசியம்! – அமைச்சரிடம் செ. நிலாந்தன் வலியுறுத்தல்

 

 


 


செங்கலடி நகருக்கான புதிய பொதுச் சந்தைக் கட்டிடம், நகர அபிவிருத்திக்கான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை கூட்டுங்கள்! – அமைச்சரிடம் செ. நிலாந்தன் கோரிக்கை

செங்கலடி நகருக்கான புதிய பொதுச் சந்தை மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்றை உடனடியாகக் கூட்டுமாறு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்குப் பொறுப்பான அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களிடம் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கடிதமொன்று அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதியொன்று மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு அவர்களிடம் செங்கலடி வர்த்தக சங்கத்தினர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் ஆகியோரால் இணைந்து கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செங்கலடி – முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து மையம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப் பெரிய பிரதேசங்களில் ஒன்றான ஏறாவூர் பற்று பிரதேசத்தின் பிரதான நகரமாக செங்கலடி நகரம் விளங்குகின்றது.

ஏறாவூர் பற்று பிரதேச மக்களின் அன்றாட தேவைகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார செயற்பாடுகளுக்கான முக்கிய கேந்திர நிலையமாக செங்கலடி நகரம் காணப்படுவதுடன், மட்டக்களப்பு–கண்டிவீதி, மட்டக்களப்பு–கொழும்புவீதி, மட்டக்களப்பு–பதுளை வீதி மற்றும் மட்டக்களப்பு–திருகோணமலைவீதி என மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து வழித்தடங்களுடன் தொடர்புபட்ட முக்கிய நகரமாகவும் செங்கலடி நகரம் அமைந்துள்ளது.

அதேவேளை, ஏறாவூர் பற்று பிரதேசம் நெற்செய்கை, கால்நடை வளர்ப்பு, தோட்டப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட பல்வேறு விவசாய நடவடிக்கைகள் இடம்பெறும் முக்கிய உற்பத்திப் பிரதேசமாக உள்ளதால், இவ்வுற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான பிராந்திய வர்த்தக மையமாக செங்கலடியை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

ஆபத்தான நிலையில் பழைய சந்தைக் கட்டிடம்!

இந்நிலையில், நீண்டகாலமாக செங்கலடி நகரில் இயங்கி வரும் பொதுச் சந்தைக் கட்டிடம் தற்போது மிகவும் பழைமையான நிலையில் காலாவாதியாகி  காணப்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
 அதனை அகற்றுமாறு மாகாண பிரதம பொறியியலாளர் அறிவித்துள்ளதால் அதனை அகற்ற பிரதேச சபை மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதனையடுத்து, ஏறாவூர் பற்று பிரதேச சபை தற்போதைய சந்தைக் கட்டிடத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

பழைய சந்தைக் கட்டிடம் அகற்றப்பட்டால், அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், செங்கலடி நகரின் அன்றாட வர்த்தக செயற்பாடுகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும்.

எனவே, பழைய சந்தைக் கட்டிடம் அகற்றப்படுவதற்கு முன்னதாகவே அதற்குப் பதிலாக தற்காலத் தேவைகளுக்கும் எதிர்கால மக்கள் தொகை மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் ஏற்ற புதிய பொதுச் சந்தைக் கட்டிடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சந்தை மட்டும் அல்ல – திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தி

புதிய சந்தைக் கட்டிடம் என்பது பழைய கட்டிடத்திற்குப் பதிலாக அமைக்கப்படும் ஒரு கட்டிடமாக மாத்திரம் இருக்கக் கூடாது எனவும், செங்கலடி நகரை எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட பிராந்திய வர்த்தக மையமாக உருவாக்கும் வகையில் அதன் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சந்தையுடன் விவசாய உற்பத்திகள், கால்நடை மற்றும் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வசதிகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கான இடங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட நவீன உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், நகர போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிடங்கள், முறையான கழிவு முகாமைத்துவம், வடிகால் வசதிகள், நடைபாதைகள் மற்றும் வீதி விளக்குகள் உள்ளிட்ட நகர அபிவிருத்தி தேவைகளும் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!

இந்தத் திட்டத்தின் ஆரம்ப பணிகளை தாமதமின்றி முன்னெடுப்பதற்காக, மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் தலைமையில் அல்லது அவரது தலையீட்டுடன் ஏறாவூர் பற்று பிரதேச சபை, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை உள்ளடக்கிய விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்றை அவசரமாக நடத்த வேண்டும் எனவும்,

குறித்த அபிவிருத்தி கூட்டத்தின் ஊடாக 
புதிய சந்தைக் கட்டிடத்திற்கான பொருத்தமான  செயற் திட்டத்தை தீர்மானித்தல்; 

கட்டிட வடிவமைப்பு மற்றும் ஆரம்ப செலவு மதிப்பீட்டை தயாரித்தல்;

சந்தையுடன் தொடர்புடைய தேவையான ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அடையாளம் காணுதல்;

 திட்டத்திற்குத் தேவையான நிதி வளங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தல்;


தேவையான அரசாங்க மற்றும் அமைச்சரவை அங்கீகாரங்களுக்கான திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல்;

திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை தயாரித்தல்;

 சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குதல்

ஆகிய ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் வருகைக்காக பல மணி நேரம் காத்திருந்த பொது மக்கள்!

இந்நிலையில், அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கரடியணாறு சந்தைப் பகுதிக்கு வருகை தருவார் என எதிர்பார்த்து பொதுமக்கள் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை காத்திருந்ததாகவும், எனினும் அமைச்சர் அங்கு வருகை தராத நிலையில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அமைச்சரிடம் கையளிக்கத் தயாரிக்கப்பட்டிருந்த செங்கலடி புதிய பொதுச் சந்தை மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைக் கடிதம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு அவர்களிடம் செங்கலடி வர்த்தக சங்கத்தினர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் ஆகியோரால் இணைந்து கையளிக்கப்பட்டது.