கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்









கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களின் ஏற்பாட்டில் 17.09.2026 இன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

​இக் கூட்டத்தில் பிரதேசத்தின் சுகாதாரம், கல்வி, வீதி உட்கட்டமைப்பு, போக்குவரத்து சீரமைப்பு, பிரதேச செயலக நிர்வாக எல்லைப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

​இதன் போது கண்ணகிபுரம் கிராம எல்லை விவகாரம், பிரதேச சபைக்குரிய வரிகளைச் செலுத்தத் தவறும் சுற்றுலா விடுதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தல், ​பாடசாலை நேரங்களிலும், அறநெறி பாடசாலை நடைபெறும்போது தனியார் மேலதிக வகுப்புகள் நடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், மகளிர் விவகார அமைச்சு ஊடாக வழங்கப்படும் நிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், சிகிச்சைத் திட்டங்களைச் சரியாகச் சென்றடையச் செய்தல், நெல் கொள்வனவு, வாழைச்சேனை பொலிஸ் நிலையச் சந்தி முதல் துறைமுகம் வரையிலான பிரதான வீதியில், ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் அடிப்படையிலான வாகன தரிப்பிட முறையை நடைமுறைப்படுத்தல்,
கிண்ணையடி பிரதேசத்தில் தற்காலிகப் படகுச் சேவையை வழங்குதல், இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை விஸ்தரித்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டை ஒழித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

​இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ. சிறிநாத், ஞா.சிறிநேசன், கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.