அனோஜன் குடும்பத்தினருக்கு உளசமூக ஆதரவு

 









சவுதி அரேபியாவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து குடும்பத்தினர் கவலை – ஜனாதிபதியின் தலையீட்டில் நம்பிக்கை

மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் சார்பில், சவுதி அரேபியாவில் அனோஜன் தொடர்பாக தற்போது நிலவி வரும் சூழ்நிலையால் அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிலைமையை அறிந்து, அவர்களுக்கு தேவையான உளசமூக ஆதரவை வழங்கும் நோக்கில், 23.09.2026 அன்று அனோஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

உளசமூக ஆதரவு மையத்தின் தலைவி தேவரஞ்சினி பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த உளசமூக ஆதரவு தொண்டர்கள், கிழக்கு மாகாணத்திற்கான உளசமூக ஆதரவு இணைப்பாளர் ஆர். சியாமளா மற்றும் தேசிய இணைப்பாளர் தேசப்பந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

சந்திப்பின்போது, அனோஜன் தொடர்பாக சவுதி அரேபியாவில் நிலவி வரும் சூழ்நிலை மற்றும் அதனால் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் கவலைகள், உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக உளசமூக ஆதரவு மையத்தின் தலைவி தேவரஞ்சினி பிரான்சிஸ் தெரிவித்தார்.

இதன்போது, குடும்பத்தினரும் தங்களுடைய தற்போதைய நிலைமை, உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி அவர்களின் தலையீடு மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்ததாக தேவரஞ்சினி பிரான்சிஸ் கூறினார்.

குடும்பத்தினருடனான கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் மற்றும் அவர்களின் தற்போதைய நிலைமையை உரிய முறையில் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உளசமூக ஆதரவு மையத்தின் சார்பில் ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த கடிதம், குடும்பத்தினரின் உணர்வுகள் மற்றும் தற்போதைய நிலைமையை மனிதநேய அடிப்படையில் உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்திலேயே தயாரிக்கப்படவுள்ளதாக தேவரஞ்சினி பிரான்சிஸ் குறிப்பிட்டார்.

அதேவேளை, எந்தவொரு சட்ட அல்லது இராஜதந்திர நடவடிக்கையிலும் தலையிடாமல், குடும்பத்தினரின் தனியுரிமை மற்றும் உணர்வுகளை மதித்து, அவர்களுக்கு தேவையான செவிமடுத்தல், உளசமூக ஆதரவு மற்றும் மனிதநேயத் துணையை வழங்குவதே மையத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் குரலை செவிமடுத்து, அவர்களின் உணர்வுகளுக்கு மனிதநேய அடிப்படையில் இடமளிக்கும் வகையில் இச்சந்திப்பு அமைந்ததாகவும் தேவரஞ்சினி பிரான்சிஸ் மேலும் தெரிவித்தார்.