தேசிய நாடகப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் – கன்னன்குடா மகா வித்தியாலய மாணவி துஷானிக்கு பாராட்டு!

 



தேசிய மட்டத்தில் நடைபெற்ற கலைப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/கன்னன்குடா மகா வித்தியாலய மாணவி தி. துஷானி, தனி நடிப்புப் பிரிவில் திறமையை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தேசிய ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தமது கலைத் திறமைகளை வெளிப்படுத்திய நிலையில், தனி நடிப்புப் பிரிவில் பங்கேற்ற மாணவி துஷானி தனது சிறப்பான நடிப்பின் மூலம் நடுவர்களின் பாராட்டைப் பெற்று தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைத் தனதாக்கியுள்ளார்.

மாணவியின் இந்த வெற்றியானது கன்னன்குடா மகா வித்தியாலயத்திற்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கும் மட்டுமன்றி, அவரது சொந்தப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.

இச்சிறப்பான சாதனையை முன்னிட்டு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் கிராமப் பொதுமக்கள் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினர் மாணவி தி. துஷானிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கலைத் துறையில் தனது திறமையை மேலும் வளர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் பல்வேறு தேசிய  சாதனைகளைப் படைக்க மாணவி                   தி. துஷானிக்கு BATTI MEDIA ஊடகம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.