கந்தசாமி பிரபுவின் கோரிக்கைக்கு இணங்க தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பிரதி அமைச்சர் விஜயம்; குறைபாடுகளை நிவர்த்தி செய்து மேம்படுத்த நடவடிக்கை

 

 

















மட்டக்களப்பு விசேட தேவையுடையோருக்கான தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விடுத்த கோரிக்கையை அடுத்து பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ விஜயம் - குறைபாடுகளை நிவர்த்தி செய்து மேம்படுத்த நடவடிக்கை. ​மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் வேண்டுகோளில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ அவர்கள் மட்டக்களப்பு விஜயம் ​மட்டக்களப்பு - கும்புறுமூலை பகுதியில் இயங்கிவரும் விசேட தேவையுடையோருக்கான தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் . ​இவ்விஜயத்தின் போது, பயிற்சி நிலையத்தின் தற்போதைய தொழிற்பாடுகள், அங்கு நிலவும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் மாணவர்களுக்கான அத்தியாவசிய தேவைப்பாடுகள் குறித்து பிரதி அமைச்சர் நேரில் பார்வையிட்டு விரிவாகக் கேட்டறிந்து கொண்டார். மேலும், பயிற்சி பெறும் விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளுடனும், பயிற்சி அளிக்கும் விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்களுடனும் அவர் நேரடியாகக் கலந்துரையாடினார். ​கிழக்கு மாகாணத்தில் உள்ள விசேட தேவையுடைய தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களைச் சமூகத்தில் சுயசார்புடன் வாழ வைக்கவும் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இந்த மையம் இயங்கி வருகின்றது. இங்கு தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்நிலையத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ​நிலையத்தின் தற்போதைய தேவைகள் மற்றும் குறைபாடுகளை ஆராய்ந்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, விசேட தேவை உடையவர்களாக உள்ள இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி இங்கு நிலவும் குறைபாடுகளை விரைந்து நிவர்த்தி செய்வதற்கும், பயிற்சி நிலையத்தின் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தியின் மக்கள் மேம்பாட்டு செயற்பாடுகள் எவ்வித பாரபட்சமும் அற்றவை அதிலும் குறிப்பாக விசேட தேவை உடையவர்கள் விடயத்தில் ஜனாதிபதி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பல்வேறு விசேட செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் இந்த தொழிற்பயிற்சி நிலையம் குறித்து தான் தொடர்ந்தும் கரிசனையுடன் செயற்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இங்கு கருத்து தெரிவித்தார். ​இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.