தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டு ஒன்றில் வழிதவறி சிக்கித் தவித்த எட்டு பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மணல்திட்டு பகுதியில் குழுவொன்று சிக்கித் தவிப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கடற்படையினர், அங்கு சென்று குறித்த குழுவினரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆண், நான்கு பெண்கள் மற்றும் 2 முதல் 14 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டவர்கள் மிகவும் சோர்வுற்ற மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டதுடன், தற்காலிக தங்குமிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடற்படையினரின் ஆரம்ப விசாரணைகளின்படி, குறித்த குழுவினர் தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இவர்கள், இராமேஸ்வரம் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளதாகவும், முன்னதாக இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் எனவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்டவர்களை மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.




