உலகையே அச்சுறுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இம்மாதம் செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி வரையிலான இடைப்பட்ட 6 மாத காலத்தில் உலகளவில் 4,50,000க்கும் அதிகமானோர் வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் உயிரிழக்கக்கூடும் என நடத்திய புதிய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த தீவிர வெப்ப மாறுபாடு, புவி வெப்பமயமாதலுடன் இணைந்து 'சூப்பர் எல் நினோவாக' உருவெடுத்துள்ளதே இந்த பெரும் அசாதாரண சூழ்நிலைக்கு முதன்மை காரணம் என தெரியவந்துள்ளது.
எல் நினோ பருவநிலை மாற்றத்தின் காரணமாக, உயிரிழப்புகள் பெரும்பாலும் ஆபிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கி பகுதியிலேயே மிக அதிகமாக பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தில் மாத்திரம் சுமார் 66,800 கூடுதலான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நைஜீரியா, இந்தோனேஷியா, சூடான் ஆகிய நாடுகள் அதிகளவில் பாதிப்பை சந்திக்கக் கூடிய நாடுகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய ஆய்வுக்குழு, தற்போது நிலவும் இந்த வெப்பநிலை அதிகரிப்பானது எதிர்கால புவி வெப்பமயமாதலின் ஒரு முன்மாதிரியாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெப்ப அலைகள் மாத்திரமன்றி, வறட்சி, காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு மற்றும் விவசாய உற்பத்தி குறைவு போன்ற பிற தீவிர பாதிப்புகளும் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் வெளிப்புற தொழிலாளர்களின் வேலை நேரத்தை முறைப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





