வடமராட்சியில் பிரசித்திபெற்ற ஆலயத்தின் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆலய அன்னதானத்துக்காக விற்பனை செய்ய முயன்ற காலாவதியான மருந்து தெளிக்கப்பட்ட 424 கிலோ வாழைக்குலைகளை விற்பனைக்கு எடுத்துச் சென்ற நபருக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.
நீர்வேலி வடக்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் காலாவதியான மருந்து தெளிக்கப்பட்ட வாழைக்குலைகளை ஆலய அன்னதான மடத்தினருக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இதன்போது, கோப்பாய் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் குறித்த வாழைக்குலைகளை கைப்பற்றியுள்ளனர்.
மனிதர்களின் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையில் அவை காணப்பட்டதால், நீதிமன்ற உத்தரவின் பேரில் 424 கிலோ வாழைக்குலைகளும் முற்றாக அழிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வாழைக்குலைகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டை சந்தேகநபர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் தண்டப்பணமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.






