கம்பஹா, இம்புல்கொட பகுதியில் வாடகை வீட்டைத் தளமாகக் கொண்டு போலி கல்விச் சான்றிதழ்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் போலி முத்திரைகளைத் தயாரித்து வந்ததாகக் கூறப்படும் 27 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்காலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், மாதாந்தம் 35,000 ரூபா வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிலேயே இந்தப் போலி ஆவணத் தயாரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, இரண்டு மடிக்கணினிகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு அச்சுப்பொறியுடன் 35 போலிச் சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுக்குரியதாகக் கருதப்படும் 51 உத்தியோகபூர்வ முத்திரைகளும், மூன்று புடைப்பு முத்திரைகளும் (Embossing Seals) காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் முத்திரைகள் மற்றும் கடிதத் தலைப்புகள் இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், பரீட்சைத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுடன், பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி, மொரட்டுவ, ரஹுணு, ரஜரட்ட, வயம்ப மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களுடன் தொடர்புடைய முத்திரைகளும் கைப்பற்றப்பட்ட பொருட்களில் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு வருட காலமாக இந்தப் போலி ஆவணத் தயாரிப்பு நடவடிக்கையில் சந்தேக நபர் ஈடுபட்டிருந்ததாகவும், சாதாரண போலிச் சான்றிதழ்கள் 25,000 ரூபா முதல் 50,000 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகத் தயாரிக்கப்பட்ட சில போலிச் சான்றிதழ்கள், குறிப்பாக ஜப்பான் செல்வதற்கான ஆவணங்கள், சுமார் 400,000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மோசடி நடவடிக்கையின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 200 பேர் வரையில் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என சந்தேக நபர் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





