32ஆவது தடவையாக மல்யுத்த சம்பியன் பட்டத்தை தக்கவைத்த மட்டக்களப்பு மாவட்டம்.













கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டி, கடந்த 19ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் திறமையான வீர வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இதில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மட்டக்களப்பு மாவட்ட மல்யுத்த அணியினர், 32ஆவது தடவையாக தொடர்ச்சியாக கிழக்கு மாகாண சம்பியன் பட்டத்தைத் தம்வசப்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற வீரர்கள் 9 தங்கப் பதக்கங்களையும் 7 வெள்ளிப் பதக்கங்களையும் வெற்றிகொண்டனர். பெண்கள் பிரிவில் 2 தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைத்துள்ளன.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் பெண்கள் பிரிவில் மூன்று வீராங்கனைகள் மாத்திரமே பங்கேற்றிருந்த நிலையில், அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இப்போட்டியில் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் மல்யுத்த வீர வீராங்கனைகள், தங்களது சிறப்பான திறமையின் மூலம் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு செய்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மல்யுத்தத் துறையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருவதுடன், இளம் வீர வீராங்கனைகளின் திறமைகளும் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மேலும் சாதனைகளைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.