22வது அரசியலமைப்புத் திருத்தம் என்றால் என்ன?

 


இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலமானது, நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்துவதுடன், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
​நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நீண்டகாலமாகக் தேங்கிக்கிடப்பதன் காரணமாக, அனுபவமிக்க நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீட்டிப்பதன் மூலமும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் வழக்கு விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடியும் என்பது அரசாங்கத்தின் பிரதான வாதமாகும்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை முறைப்படி நடைமுறைப்படுத்துவதற்கும், சட்ட கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்கும் இச்சீர்திருத்தம் அவசியமானது எனக் குறிப்பிடப்படுகின்றது.
​இருப்பினும், ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது மட்டுமே வழக்குத் தேக்கநிலைக்கு முழுமையான தீர்வாக அமையாது என்றும், நிறைவேற்று அதிகாரத்தின் நலன்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவே இவ்வாறான அவசரத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சிகளும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் (BASL) குற்றஞ்சாட்டுகின்றன. இது நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனச் சில சர்வதேச சட்ட அமைப்புகளும் கவலை வெளியிட்டுள்ளன.
​இதனிடையே, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்பு செல்லுபடித் தன்மை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உச்சநீதிமன்றம், இதற்கு மக்கள் தீர்ப்பு அல்லது சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) அவசியமில்லை என்றும், நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் (மூன்றில் இரண்டு) நிறைவேற்றப்பட முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.