பாடுமீன்களின் சமர் 2026: 130 ஓட்டங்களால் மெதடிஸ்த மத்திய கல்லூரி அபார வெற்றி! – 6ஆவது முறையாகவும் கிண்ணம் வசம்

 




மட்டக்களப்பின் பாரம்பரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி அணிகளுக்கிடையிலான 2026ஆம் ஆண்டுக்கான “பாடுமீன்களின் சமர்” 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

புதிய கோட்டைமுனை விளையாட்டு மைதானத்தில்  சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டி, இரு பாடசாலைகளின் பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

காலை 8.30 மணியளவில் ஆரம்பமான போட்டியின் தொடக்க நிகழ்வில், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (M.P) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டதுடன், புனித மிக்கேல் கல்லூரி அதிபர் ஏ.வீ. ஜோசப், 243ஆவது படைப்பிரிவின் படைக்கட்டளை அதிகாரி கேணல் ஆர்.ஆர்.கே. ராஜபக்ஷ உடகே, மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பொறியியலாளர் என்.வீ. ரஞ்சன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் பொறுமையாக ஓட்டங்களைச் சேர்த்த அந்த அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.

192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய புனித மிக்கேல் கல்லூரி அணிக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை ஏற்படுத்தினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த புனித மிக்கேல் அணி, 61 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன் மூலம் மெதடிஸ்த மத்திய கல்லூரி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கியது. இந்த வெற்றியுடன் “பாடுமீன்களின் சமர்” வெற்றிக் கிண்ணத்தை தொடர்ந்து ஆறாவது தடவையாகவும் கைப்பற்றி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளது.

போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகளிலும் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்த நிலையில், மைதானம் முழுவதும் இரு கல்லூரிகளின் ஆதரவாளர்களாலும் உற்சாகமடைந்திருந்தது. ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் திரண்டு இரு அணிகளுக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, மாலை 3 மணியளவில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் முன்னாள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரும் தேசிய கிரிக்கெட் அணியின் மட்டையடிப் பயிற்றுவிப்பாளருமான ஹஷான் பிரசந்த திலகரத்ன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கான கிண்ணங்களையும் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.

கூட்டுறவுப் பங்கான்மைச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் த. இராஜலிங்கம் ரூஷந்தன், டொக்டர் விஜயநாயகம துதிகரன் உள்ளிட்ட பலரும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.