மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரைப்
பகுதியை ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக உயர்த்தும் நோக்கில், சாத்தியவள
அறிக்கை தயாரிப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்
ஒரு பகுதியாக, பாசிக்குடாவின் சுற்றுலா வளங்கள் மற்றும் அவற்றின்
வளர்ச்சிச் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக உலக வங்கியின் (World Bank)
உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் அண்மையில் அப்பகுதிக்கு நேரில் விஜயம்
செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
பாசிக்குடாவின் இயற்கை எழில்
மற்றும் தனித்துவமான கடற்கரை வளங்களை முறையாகப் பயன்படுத்தி, அப்பகுதியில்
சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன்
மூலம் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதோடு, உள்ளூர்
மக்களுக்குப் புதிய வாழ்வாதார மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கள ஆய்வின்போது, கோறளைப்பற்று பிரதேச
சபைத் தவிசாளர் சு.சுதாகரன், பிரதேச சபைச் செயலாளர், தொழில்நுட்ப
உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பிற திணைக்களங்களின்
பிரதிநிதிகள் உலக வங்கிக்குழுவினருடன் இணைந்து பங்கேற்றனர்.
எதிர்காலத்தில்
பாசிக்குடாவை சர்வதேச தரம் வாய்ந்த முதன்மைச் சுற்றுலா மையமாக
மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கோறளைப்பற்று பிரதேச சபை தொடர்ந்து
முன்னெடுக்கும் என தவிசாளர் இதன் போது தெரிவித்தார்.









