ஒலிபெருக்கி பயன்பாட்டில் கட்டுப்பாடு – சட்ட விதிகளை மீறினால் நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!

 



பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒலிபெருக்கிகளிலிருந்து வெளியாகும் அதிகளவிலான சத்தம் சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, பிறருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டக்கோவையின் 261ஆம் பிரிவின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் குற்றமாகக் கருதப்படும். அவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது.

எனினும், மத நிகழ்வுகள் மற்றும் விசேட நிகழ்வுகளுக்கு உரிய பொலிஸ் அனுமதிப் பத்திரத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக குறிப்பிட்ட நேரங்களில் சலுகை வழங்கப்படலாம்.

அதன்படி, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இரவு 10.00 மணி வரையும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.00 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணி வரையும், அனுமதி வழங்கப்பட்ட நேரத்திற்குள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.

எவ்வாறாயினும், பொலிஸ் அனுமதி பெற்றிருந்தாலும், குறித்த வளாகத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு அதிக சத்தத்தால் அசௌகரியம் ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறி செயற்படுவோரின் ஒலிபெருக்கி சாதனங்களை கைப்பற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அதிக சத்தத்தினால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.