அநுராதபுரம் - கல்நேவ பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்நேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கல்நேவ பொலிஸ் குழுவினரும் வடமத்திய மாகாண ஆயுர்வேதத் திணைக்களத்தின் சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கஞ்சா அடங்கிய 94 சிறிய பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், கஞ்சா கலந்த போதைப்பொருட்கள் அடங்கிய 150 கிராம் நிறை கொண்ட 15 போத்தல்கள், 250 கிராம் நிறை கொண்ட 21 போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கஞ்சா கலந்த போதைப்பொருட்களின் மொத்த நிறை 9 கிலோகிராம் 296 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கல்நேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





