மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்-2026



 











கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று 12/08/2026 நடைபெற்றது.

ஆடி அமாவாசையில் பிதிர்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமாக  மாமாங்கேஸ்வரர் தீர்த்த குளம் சிறப்பு இடம் வகிக்கின்றது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க தலமாக இத் திருத்தலம் விளங்குகின்றது.

கடந்த 3/08/2026 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த பத்து தினங்களாக திருவிழாக்கள் நடைபெற்றுவந்ததுடன் நேற்றைய தினம் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்று காலை இடம்பெற்ற வசந்த மண்டப விசேட பூஜையினை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர்  வெளி வீதியுலா இடம்பெற்று,  தீர்த்தக்   கேணியை அடைந்து மாமாங்கேஸ்வரப் பெருமானுக்கு தீர்த்தக்கேணியில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தீர்த்தோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.