'ஹிஜாப் அணிவது முஸ்லிம் மதத்தில் தவிர்க்க முடியாத பழக்கம் அல்ல' - உயர் நீதிமன்றம்

 


பள்ளி சீருடையுடன், முகத்தை மட்டும் மறைக்கும் துணியான, 'ஹிஜாப்' அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'பள்ளி சீருடை விதியில் தனி விலக்கு கோர முடியாது' என, தெரிவித்துள்ளது.

   

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தாகூர் பப்ளிக் பள்ளியில் ப்ளஸ் 1 வகுப்பில் சேர சுகைனா ரிஸ்வி என்ற முஸ்லிம் மாணவி விண்ணப்பித்து இருந்தார். பள்ளி சீருடையுடன், முகத்தை மட்டும் மறைக்கும் துணியான ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரி அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் ஜே.ஜே.முனீர், இந்திரஜித் சுக்லா அமர்வில் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.


சீருடை கட்டுப்பாடு என்பது ஒழுக்கத்தையும், நிறுவன அடையாளத்தையும் பேணும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த கட்டுப்பாட்டை தீர்மானிக்கும் முழு அதிகாரம் பள்ளி நிர்வாகத்திற்கே இருக்கிறது. தனிப்பட்ட அல்லது மத விருப்பங்கள் அடிப்படையில் மாணவ, மாணவியர் அதில் விலக்கு கோர முடியாது.

அணிவதற்கு நிர்வாகம் தடை சொல்லவில்லை என்பதற்காக அதை இப்போதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. பள்ளிகளில் சீருடை அணிவது என்பது மாணவ, மாணவியரிடையே சமத்துவத்தை பேணவும், ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து மதசார்பற்ற சூழலை உருவாக்கவும் தான்.

வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவது மத ரீதியாக கட்டாயமானது என்றோ; அதை அணியாவிட்டால் மத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்றோ நிரூபிக்க போதுமான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது 'ஹிஜாப் அணிவது முஸ்லிம் மதத்தில் தவிர்க்க முடியாத பழக்கம் அல்ல' என, கடந்த 2022ல் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.