சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல இந்த எதிர்க்கட்சியினர் பதறியடித்துக் கொண்டு திரிகின்றனர்- கந்தசாமி பிரபு -

 


நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (31) அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹிந்து நெத்தி தலைமையில் பழைய கச்சேரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், நீதிபதிகளின் வயது எல்லையை அதிகரிப்பதற்கு கூட்டுச் சேர மாட்டோம் என்றார்கள். இன்று கூட்டுச் சேர்ந்து கொண்டு மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து, தப்பிக் கொள்வதற்காக சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல இந்த எதிர்க்கட்சியினர் பதறியடித்துக் கொண்டு திரிகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மயிலத்தமடு மாதவனை காணி தொடர்பாக அவர்கள் எதிர்பார்க்கின்ற 3 ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பான முன்னேற்றம் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.