மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேரில் பெரும்போக நெற்செய்கை: மாவட்ட செயலகத்தில் விசேட கலந்தாய்வு

 



மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போகத்தில் 74,900 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான 15 லட்சத்து 43 ஆயிரத்து 500 கிலோ உரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்த விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம், பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எச்.அருள்ராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சிவனேசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர்கள், கமநல அபிவிருத்தி உதவிப் பணிப்பாளர் ஆர்.யோகராஜன், தேசிய உரச் செயலக பிரதிப்பணிப்பாளர், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், துறைசார் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில், மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் முறையான நீர் முகாமைத்துவம் மூலம் சிறந்த அறுவடையைப் பெறவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் பெரும்போக விதைப்பு காலத்தில் தடங்கலின்றி விதை நெல் மற்றும் உரத்தைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதுடன், அதற்கான நடைமுறைச் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயக் கடன் வசதிகள், பயிர் காப்பீடு, குளங்கள் மற்றும் விவசாய வீதிகள் அபிவிருத்தி, வாய்க்கால் புனர்நிர்மாணம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. 

இக்கூட்டத்தில் முந்தனையாறு திட்டத்தை அமல்படுத்துவதில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மந்தகதியான செயல்பாடுகள் குறித்து விவசாயிகள் காரசாரமான கருத்துகளை முன்வைத்ததுடன், மனித-யானை மோதலால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கான நஷ்டஈடு வழங்கும் நடைமுறைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.