கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 


அம்பாந்தோட்டை பரிசீலனை ஒருங்கிணைப்பு மையத்தில், வௌ்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான பௌதிகவியல் (Physics) முதலாம் தாள் அடங்கிய ஆறு பொதிகள் தவறாக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வியாழக்கிழமை (13)  நடைபெற்ற சங்கீதம், நடனம் மற்றும் விவசாய விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் அடங்கிய கொள்கலனுக்குள்  இந்தப் பௌதிகவியல் வினாத்தாள் பொதிகளும் காணப்பட்டுள்ளன. பரீட்சை அதிகாரிகள் கொள்கலன்களைச் பரிசோதித்தபோதே இந்தத் தவறு கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட பௌதிகவியல் வினாத்தாள் பொதிகள் எவையும் திறக்கப்படவில்லை அல்லது இரகசியத்தன்மை மீறப்படவில்லை எனப் பரீட்சை ஆணையாளர் ஜெனரல் இந்திகா குமாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், அம்பாந்தோட்டை ஒருங்கிணைப்பு மையத்தில் பௌதிகவியல் வினாத்தாள் பொதிகள் எவ்வாறு தவறுதலாக வேறு கொள்கலனுக்குள் வைக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.