சிவகுமார்.M
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, கடந்த 21.07.2026 செவ்வாய்க்கிழமை அன்று கல்லூரியின் காலைப் பிரார்த்தனை நிகழ்வின் போது (Morning Assembly) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபரும் மாணவத் தலைவர்களுக்கான பொறுப்பாசிரியருமான திரு. K. பகீரதன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் திரு. K. பகீரதன், பிரதி அதிபர்களான திரு. K. பிரபாகர், திருமதி. G. J. நகுலன், திருமதி. T. நவநீதன் மற்றும் உதவி அதிபர்களான திரு. P. பிரியதீசன், திரு. P. நித்தியானந்ததாசன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய மாணவத் தலைவர்களுக்குச் சின்னங்களைச் சூட்டினர்.
இம்முறை தரம் 10 இல் பயிலும் 22 மாணவர்களுக்கும், தரம் 12 இல் பயிலும் 10 மாணவர்களுக்கும் என மொத்தம் 32 மாணவர்களுக்கு மாணவத் தலைவர் சின்னங்கள் சூட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து, புதிய மாணவத் தலைவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் நடைபெற்றது.
இதன்போது, தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பின் மூலம் தமது தலைமைத்துவத் திறமைகளை வெளிப்படுத்தி, கல்லூரிக்குச் சிறந்த சேவையாற்றுவோம் என மாணவர்கள் உறுதியேற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அதிபர் அவர்கள், மாணவத் தலைவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்துத் தெளிவுபடுத்தினார். அத்துடன் கல்லூரியின் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக புதிய தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வின் நிறைவில், புதிய மாணவத் தலைவர்களுக்குப் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

















































