புகையிரதக் கடவைக்காப்பாளர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று கடிதமொன்றைக் கையளித்துள்ளது.

 


பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் கடந்த 14 வருடங்களாகக் கடமையாற்றி வரும் தமக்கு முறையான சம்பளக் கொடுப்பனவுகளை வழங்கக் கோரியும், தங்களை நிரந்தரப் பணியாளர்களாக உள்வாங்கக் கோரியும் புகையிரதக் கடவைக்காப்பாளர்கள் குழுவொன்று திங்கட்கிழமை (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று கடிதமொன்றைக் கையளித்துள்ளது.

பல வருடங்களாகத் தீர்க்கப்படாதுள்ள தங்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்தியே இந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தை கையளித்த பின்னர் அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தம்மிக முனசிங்க, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,அபாயகரமான மற்றும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் எவ்வித நிரந்தர நியமனங்களும் இன்றி, கடந்த 14 வருடங்களாக இந்த ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தைத் தவிர வேறு எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை. ஆரம்பக் காலகட்டங்களில் இவர்களது எட்டு மணித்தியாலக் கடமை நேரத்துக்காக வெறும் 500 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இவர்களது தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக தற்போதைய அரசாங்கத்தினால் அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டது.

இருப்பினும், அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி தாக்கத்தின் பின்னர் புகையிரதச் சேவைகள் நிறுத்தப்பட்டதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த 07 மாத காலப்பகுதிக்குள் கடமையாற்றும் ஊழியர்கள் எவருக்கும் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை. அண்மைய நாட்களாகத் தற்காலிக மற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குவது குறித்து அரசாங்கம் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்த போதிலும், கடந்த 14 வருடங்களாகக் கடமையாற்றும் இந்த புகையிரதக் கடவைக்காப்பாளர்களை நிரந்தரமாக்குவதற்கான எந்தவொரு முறையான திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த ஊழியர்களுக்கு எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை எனப் பெரியளவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், யதார்த்தத்தில் இந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட திகதி கூட இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, இவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக்காப்பாளர்களின் ஒன்றியம் சார்பில் இக் கடிதத்தை சமர்பிக்கப்பட்டது என்றார்.