
யானை – மனித சகவாழ்விற்கான அமைச்சரவை அங்கீகாரத்துடனான நிபுணர் குழு தமது பணியை ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் இயற்கை சுற்றுச்சூழல் தொகுதியை பாதுகாப்பதிலும், நீண்டகால சமூக-பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதிலும் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், யானை – மனித சகவாழ்விற்கான புதிய தேசிய செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்கான தேசிய பணியை சுற்றாடல் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
கடந்த சில தசாப்தங்களாக ஏற்பட்ட அதிவேக மக்கள் தொகை வளர்ச்சி, ஒழுங்கற்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் காடழிப்பு ஆகியவற்றின் காரணமாக, காட்டு யானைகளின் பாரம்பரிய புலம்பெயர்வுப் பாதைகளும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களும் இழக்கப்பட்டுள்ளன. இதற்கு அறிவியல் பூர்வமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைக் காண்பதற்காக, ஜனாதிபதி செயலகத்தில் பல விசேட கலந்துரையாடல்கள் அண்மையில் நடத்தப்பட்டன.
இக்கலந்துரையாடல்களின் போது, தற்போது நடைமுறையிலுள்ள “இலங்கையில் யானை – மனித மோதல்களைக் குறைப்பதற்கான தேசிய செயல் திட்டம் – 2020” தயாரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாலும், தற்போதைய அடிமட்ட நிலவரங்களும் மோதல்களின் தன்மையும் கணிசமாக மாறியுள்ளதாலும், புதிய தேசிய செயல் திட்டமொன்றின் காலோசித தேவை உருவெடுத்துள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய, புதிய அரசாங்கத்தினதும் நாட்டின் முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர்களினதும் கூட்டுத் தலையீட்டின் மூலம், அமைச்சரவை அங்கீகாரத்துடன் கூடிய தேசிய நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தத் தேசிய பணியின் முதன்மையான அடித்தளமும் பலமும் என்னவெனில், நாட்டின் புகழ்பெற்ற வனவிலங்கு விஞ்ஞானிகளும் சூழல் ஆர்வலர்களுமான கலாநிதி பிருதிவிராஜ் பெனாண்டோ, கலாநிதி சுமித் பிலபிட்டிய, கலாநிதி யு.கே.ஜி.கே. பத்மலால் மற்றும் கலாநிதி எஸ். விஜேமோகன் உள்ளிட்ட முன்னணி நிபுணர்களின் நேரடிப் பங்களிப்பு இதற்கு கிடைத்துள்ளமையாகும்.
பல வருட அடிமட்ட அனுபவங்களையும் சர்வதேச ஆராய்ச்சி அறிவையும் கொண்ட இந்த நிபுணர் குழுவின் ஊடாக, வெறும் ஆவணங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாத, துல்லியமான விஞ்ஞான அடிப்படையிலான தீர்வுகள் தயாரிக்கப்படவுள்ளதுடன், சட்டபூர்வமாக அங்கீகரிக்கக்கூடிய மற்றும் அடிமட்டத்தில் உண்மையாகவே செயல்படுத்தக்கூடிய நடைமுறை உத்திகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு, நிலையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான தெளிவான விதிகளை உள்ளடக்கிய இந்தத் தேசிய திட்டம், வரவிருக்கும் 03 மாதங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க இக்குழு எதிர்பார்க்கிறது.
புதிய தேசிய திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் அதே வேளையில், அடிமட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக அரசாங்கத்தினால் பல செயற்திறன் மிக்க திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்களின் கீழ், காட்டு யானைகளின் பாரம்பரிய நடமாட்டப் பாதைகளிலுள்ள தடைகளை நீக்கி, யானை வழித்தடங்களை (Elephant corridors) விடுவிப்பதும், “வனஸ்பதி” தேசிய திட்டத்தின் மூலம் இலங்கையின் காட்டுத் தொகுதியைப் பாதுகாத்து, யானைகளுக்கான உணவு மற்றும் நீரை காடுகளுக்குள்ளேயே வழங்குவதற்கான விசேட “யானை போசணை வலயங்களை” உருவாக்குவதும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
அரசாங்கமும் நிபுணர்களும் இணைந்து எடுக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மூலம் மனித உயிர்களும் சொத்துக்களும் பாதுகாக்கப்படுவதுடன், இலங்கையில் யானை – மனித சகவாழ்வின் புதிய பரிமாணங்கள் ஏற்படுத்தப்படும்.




