இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவக்கார உற்பத்திகளுக்கு புதிய கட்டுப்பாடு -

 


இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ஒழுங்குவிதிகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியசாலையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியின் பெயர், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அல்லது ஏதேனும் இரு மொழிகளில் தடித்த எழுத்துக்களில் பிரதான பக்கத்தில் அச்சிடப்பட வேண்டும். மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு பக்கத்தில் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தியில் உள்ள மொத்தக் கொழுப்பு உள்ளடக்கம் சதவீத அடிப்படையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இந்த எழுத்துக்கள் 2 மில்லிமீற்றருக்குக் குறையாத அளவில் தடித்த எழுத்துக்களில் அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குவிதிகள் குழந்தை சவக்காரம், குளியல் சவக்காரம், சவர சவக்காரம் , கார்போலிக் சவக்காரம், சலவை சவக்காரம் மற்றும் மென் சவக்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்குப் பொருந்தும்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் 2027 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.