மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவுக்கு லயன்ஸ் கழகத்தால் 30 கதிரைகள் வழங்கி வைப்பு!

 

 

 

 

 


 



















சிவகுமார் .M



மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் (Lions Club - Spectrum for Humanity, District 306D10) மனிதநேய செயல்பாட்டின் ஒரு அங்கமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விடுதிக்கு அவசியமாகத் தேவைப்பட்ட 30 கதிரைகள்  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த இக்கதிரைகளை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்களிடம் லயன்ஸ் கழகத்தினர் நேரில் சென்று கையளித்தனர்.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் (Spectrum for Humanity) தலைவர் நவீகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிவாரணப் பணியில், கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் 10 பேர் கலந்து கொண்டு மனிதாபிமான அடிப்படையிலான இப்பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

 மட்டக்களப்பு "லயன்ஸ் கிளப் -  (Spectrum for Humanity) அமைப்பு, கடந்த 6 மாதங்களாக அப்பகுதி மக்களின் வாழ்வாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறது. இக்கழகம் பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளை இனங்கண்டு, அங்கு பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி தடையின்றித் தொடர கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகளை வழங்கி வருவதோடு, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விளிம்புநிலை மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது. அத்துடன், வைத்தியசாலைகள் மற்றும் பொதுச் சுகாதார மையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகளை உடனுக்குடன் கண்டறிந்து நிவர்த்தி செய்து வரும் இக்கழகம்,  மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து உன்னத சமூகத் தொண்டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.