அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் பதிவு கட்டாயமாக்கப்படும்.

 


 

நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களைப் பதிவு செய்வதையும் ஒழுங்குபடுத்துவதையும் வலுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே இதனை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.



இதுவரை 455 முதியோர் இல்லங்கள் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 10,000க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், பல நிறுவனங்கள் முறையான பதிவின்றி தொடர்ந்து இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முன்மொழியப்பட்ட விதிமுறைகளின் கீழ், அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் பதிவு கட்டாயமாக்கப்படும் என்பதுடன், இதன் மூலம் முறையான கண்காணிப்பையும் பராமரிப்புத் தரத்தையும் அதிகாரிகள் உறுதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹொரணை - அங்குருவாத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, பாதுகாப்பாக மீட்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட 08 முதியவர்கள், கதிர்காமத்தில் உள்ள அரச முதியோர் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தீ விபத்தில் 12 வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் நேற்று (4) ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து,ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


தீ விபத்துக்கான காரணம் குறித்தான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, குறித்த முதியோர் இல்லம் உத்தியோகபூர்வ பதிவின்றி இயங்கி வந்தமை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.