மட்டுநகர் திமிலைதீவு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய மகோற்சவம்: கலைத்துவமான திருவிளையாடல்களுடன் களைகட்டும் திமிலைதீவு

   

















சிவகுமார். 

 தேனும் பாலும் செந்நெல்லும் செழித்தோங்கும் மட்டுமாநகரின் திமிலைதீவு கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு (கிருஷ்ண பரமாத்மா) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஜூன் 05ஆம் திகதி (2026.06.05) பக்திபூர்வமாக ஆரம்பமானது.

மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் இரண்டரை மைல் தொலைவில், வாவியும் வயல்வெளிகளும் சூழ்ந்த எழில்மிகு திமிலைதீவு கிராமத்தின் காவல் தெய்வமாக இவ்வாலயம் திகழ்கிறது. தமிழர்களின் பூர்வீகக் குடியேற்றக் காலத்திலிருந்தே இயங்கி வரும் இந்த ஆலயம், ஆரம்பத்தில் ஓலைகளாலும் பின்னர் செங்கற்களாலும் கட்டப்பட்டு, இன்று எழில்மிகு கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

இங்கு விஷ்ணுவுடன் விநாயகர், முருகன் ஆகியோருக்கு சன்னதிகள் இருப்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலேயே சனீஸ்வர பகவானுக்கு எனத் தனியான ஒரு பரிவாரக் கோயில் அமையப்பெற்றுள்ள ஒரே விஷ்ணு ஆலயம் இதுவென்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவ்வாலயத்தின் தோற்றம் குறித்து ஒரு சுவாரசியமான வரலாறு சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் அரச மரத்தடியில் தவமிருந்த யோகி ஒருவர், கிராமத் தலைவரின் மகனான 'சாம்பத்தின்னிப் போடியார்' என்பவருக்குத் தனது பூசை முறைகளை உபதேசித்தார். ஒருமுறை மரணத் தறுவாய்க்குச் சென்ற போடியார், அந்த யோகியின் அருளால் உயிர் மீண்டதுடன், யோகி மறைந்த பின்னர் அவர் விட்டுச் சென்ற ஆஞ்சநேயர் மணி மற்றும் கலசத்தைக் கொண்டு ஆலய வழிபாடுகளை முன்னெடுத்தார். இன்றும் அந்த புனிதப் பொருட்கள் ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதுடன், அந்த யோகியின் வம்சாவளியினரே பரம்பரை பரம்பரையாகப் பூசைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையிலேயே மிகவும் அரிதான முறையில், கிருஷ்ணரின் திருவிளையாடல்களை நாடகப் பாணியில் சித்தரிக்கும் தனித்துவமான மரபைக் கொண்ட ஆலயமாக திமிலைதீவு மகா விஷ்ணு ஆலயம் திகழ்கிறது. தமிழர்களின் பாரம்பரியப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமையும் இவ்வுற்சவத்தைக் காணப் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் திரண்டு வருகின்றனர்.

வைகாசி மாத அமரபட்ச திருவோண நட்சத்திரத்தில் கார்மேகக் கண்ணனின் அவதார தினத்தை முன்னிட்டு ஆரம்பமான இத்திருவிழா பத்து  நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

  • ஆரம்பம்: 05.06.2026 வெள்ளிக்கிழமை மாங்கனி  பறிக்கும் சடங்குடன் ஆரம்பமாகியது 

  • நிறைவு: எதிர்வரும் 13.06.2026 அன்று மாலை திருக்கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு இடம் பெற்று , 2026.06.14  அதிகாலை  திருக்கல்யாண சடங்குடன் ஆலய மகோற்சவம்  இனிதே நிறைவுபெறவுள்ளது.

இன, மத வேறுபாடுகளைக் கடந்து பக்தி வெள்ளத்தில் திளைக்கும் திமிலைதீவு கிராமம், தற்போது மாயவனின் அருளாட்சியில் விழாக்கோலம் பூண்டுள்ளது.