இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை.

 


மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான எந்தவொரு முடிவையும் அரசாங்கம் எடுக்கவில்லை. 
 
அதேநேரம், கடன் கடிதங்கள் (Letters of Credit - LC) திறப்பதில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கம் தற்காலிக கூடுதல் கட்டணம் (Surcharge) ஒன்றை விதித்திருந்தது.

இந்த முடிவைத் தொடர்ந்து, அண்மைக்கால இறக்குமதித் தேவைகள் ஏற்கனவே குறைவடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், மே 15 ஆம் திகதி மட்டும் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 1,782 வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 380 கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்டுள்ளதாக அவர் தரவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த தற்காலிக கூடுதல் கட்டணமானது ஒரு வரியாக அறிமுகப்படுத்தப்படவில்லை.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் தேவையற்ற அழுத்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஒரு குறுகிய கால நடவடிக்கையாகவே இது மேற்கொள்ளப்பட்டது.

வாகன இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணயத் தேவை திடீரென அதிகரித்ததே ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்குக் காரணியாக அமைந்தது என்றும் அவர் விளக்கமளித்தார்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாகனங்களை இறக்குமதி செய்பவர்கள், தங்களது இறக்குமதிகளை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளையில், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது பொருளாதார நடவடிக்கைகளை முடக்குவதற்கோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

"ஒருவரால் மூன்று மாதங்கள் காத்திருக்க முடியாவிட்டால், அவர்கள் அரசாங்கக் கொள்கையின்படி கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும். கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது இறக்குமதியாளர்களுக்குத் தெரியும். அதனைத் தவிர்த்து, ஏற்கனவே நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் விலைகளை உயர்த்துவது நியாயமற்றது" என்றும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.