வில்லுப்பாட்டு போட்டியில் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை முதலிடம்: ஔவை விழாவில் பரிசுகள் வழங்கி கௌரவிப்பு!

 
























கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவை நடத்திய மாவட்ட ரீதியிலான வில்லுப்பாட்டு போட்டியில், கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில், கடந்த 2026.04.19 அன்று மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இப்போட்டி  நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 10 முன்னணி அறநெறிப் பாடசாலைகள் பங்குபற்றிய இக்கடுமையான போட்டியில், தங்களின் திறமைகளை நேர்த்தியாக வெளிப்படுத்திய கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை முதலாம் இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டது.

வெற்றிபெறும் அறநெறிப் பாடசாலைகளுக்கான பணப் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் ஔவை நினைவுச் சின்னங்கள் யாவும் கல்லடியில் நடைபெறும் ஔவை விழாவின் போது வழங்கி வைக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம், கடந்த 2026.06.21 அன்று கல்லடியில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற ஔவை விழாவின் போது பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இப்போட்டியில் வில்லுப்பாட்டை மிகச்சிறந்த முறையில் நெறிப்படுத்திய ஓய்வு நிலை அதிபர் திருமதி தே. அருட்சோதி அவர்கள், ரூபா 50,000.00 பெறுமதியான காசோலையினை விழாவின் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இத்தோடு நின்றுவிடாமல், வில்லுப்பாட்டு போட்டியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய அறநெறிப் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் விழா மேடையில் அதிதியவர்களால் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தங்களின்  திறமையை வெளிக்காட்டி கல்லடி மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களுக்கும், அவர்களை திறம்பட நெறிப்படுத்திய ஓய்வு நிலை அதிபர் திருமதி தே. அருட்சோதி அவர்களுக்கும் battimedia.lk ஊடகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது!