தவறான முறைக்குட்படுத்தப்பட்ட மகள்...! மனவேதனையில் தந்தை உயிர்மாய்ப்பு - மட்டக்களப்பில் சம்பவம் .



மட்டக்களப்பில் தனது மகள் நபரொருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த தந்தை, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் காத்தான்குடி காவல் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் வசித்துவரும் 54 வயதுடைய ஆண் ஒருவர், அதே வீதியிலுள்ள 12 வயது சிறுமியின் வீட்டுக்கு வழக்கமாகச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த 12 வயதுடைய சிறுமியின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.

அப்போது அந்தச் சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் சிறுமியும் அவரது நண்பியான பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர்.

இதன்போது சிறுமியின் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குறித்த நபர், அந்த 12 வயதுச் சிறுமியைத் தவறான முறைக்கு உட்படுத்தியதுடன் பக்கத்து வீட்டு 10 வயதுடைய சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பத்து வயதுச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் 12 வயதுச் சிறுமிக்கு நடந்ததை பார்த்த பக்கத்து வீட்டு 10 வயது நண்பியான சிறுமி, பாடசாலையில் அவரைப் பகிடி (கேலி) செய்து வந்துள்ளார்.

இந்த விபரம் ஆசிரியருக்குத் தெரியவந்ததையடுத்து அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அழைத்து விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புதன்கிழமை (17-06-2026) காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருமணம் முடித்து மனைவியை விவாகரத்து செய்துள்ளவரும் ஒரு கையும் காலும் இயங்காத நிலையில் உள்ளவருமான 54 வயதுடைய விசேட தேவையுடைய குறித்த சந்தேகநபரை நேற்று (18-06-2026) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பின்பு பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமியின் தந்தையார் தனது மகளுக்கு நடந்த கொடூரத்தையும் அவமானத்தையும் தாங்க முடியாமல் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் நேற்று (18-06-2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குறித்த பிரதேச காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, ஏற்கனவே ஒரு கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் அவர் மாதத்தில் ஒரு நாள் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது