மட்டக்களப்பில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி ராட்சத முதலை: பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பத்திரமாக மீட்பு!

 



 மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை சுமார் 8 அடி நீளமுடைய ராட்சத முதலை ஒன்று புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடியிருப்பு பகுதியில் முதலை நடமாடுவதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், பொதுமக்களின் நீண்ட போராட்டத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் பின் முதலையை உயிருடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அதிகாரிகளினால் பாதுகாப்பான இயற்கை வாழிடம் ஒன்றில் விடுவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் தற்காலிகமாக அச்சநிலை நிலவிய போதிலும், அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கையினால் எவ்வித உயிர்ச்சேதமோ, காயங்களோ இன்றி முதலை பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.