சாரதி ஒருவர் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர் .

 

 


 ஹங்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 6ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எம்புல்கம- பனாகொட வீதியில் எம்புல்கம நோக்கிப் பயணித்த சிற்றூந்து ஒன்று, அதே திசையில் வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தை ஏற்படுத்திய சிற்றூந்து, மோதிய பின் நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் உடனடியாக நவகமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ரனால மற்றும் கிராந்துருகோட்டே பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சம்பவத்தை அடுத்து, சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரான சாரதியை கைதுசெய்ததுடன், விபத்துக்குப் பயன்படுத்தப்பட்ட சிற்றூந்தையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் மதுபோதையில் இருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஹங்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.