மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் மாத்தளை மாணவனுக்கு இரண்டாம் இடம்!

 



மலேசியாவின் ஜென்டிங் நகரில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித (Abacus & Mental Arithmetic) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாத்தளை மாணவன் எஸ். லபிஷாசன், இரண்டு போட்டி நிகழ்வுகளிலும் இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், மாத்தளையில் எஸ். லபிஷாசன் தனது அபாரமான கணிதத் திறமையை வெளிப்படுத்தி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
மாத்தளை, மண்டந்தாவெல பகுதியைச் சேர்ந்த சுகந்தன் – சசிரேகா தம்பதியினரின் புதல்வரான இவர், தற்போது ஹார்வர்ட் சர்வதேச பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறுகிய காலப் பயிற்சியிலேயே சர்வதேச அரங்கில் தனது திறமையை நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி மாத்தளை மாவட்டத்திற்கும், மத்திய மாகாணத்திற்கும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், இளம் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.
சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்த மாணவன் எஸ். லபிஷாசனுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.