SIVAKUMAR.M
புலம்பெயர் தேசத்து உறவான ஷெல்வின் தாஸ் அவர்களின் தயாரிப்பில், ‘AZONWAY PICTURES’ இன் உருவாக்கமாக, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வெளியீட்டில் உருவான “கூத்தாடி” முழுநீளத் திரைப்படம் இன்று (ஜூன் 19, 2026) இலங்கை முழுவதும் 24 திரையரங்குகளில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், செங்கலடி ‘செல்லம்’ திரையரங்கில் நடைபெற்ற விசேட வெளியீட்டு நிகழ்வின் போது மட்டக்களப்பின் மூத்த கூத்துக் கலைஞர்கள் இருவர் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கூத்துக்கலையை ஊக்குவிக்கும் உன்னத நோக்கில், மட்டக்களப்பைச் சேர்ந்த மூத்த அண்ணாவிமார்களான சின்னையா ஞானசேகரம் மற்றும் சீனித்தம்பி சிவபாதசேகரம் ஆகிய இருவருக்கும் தலா 50,000 ரூபாய் வீதம், மொத்தம் ஒரு இலட்சம் ரூபாய் (100,000/-) பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டது.
செல்லம் திரையரங்கு உரிமையாளர் மோகன் கணபதிபிள்ளை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன் ஆகியோரால் இப்பொற்கிழி வழங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக இன்று இரு மூத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டது போல, எதிர்வரும் காலங்களிலும் ஏனைய கலைஞர்களும் கட்டம் கட்டமாகக் கௌரவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட தயாரிப்பாளர் ஷெல்வின் தாஸ், ஒரு சிறந்த நடிகர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாவார். அவர் புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும், தாயகத்தின் பாரம்பரிய கிராமியக் கூத்து, கலை, நாடக மரபு மற்றும் தமிழ் பண்பாட்டு அடையாளங்களைப் பேணி ஊக்கமளித்து வருபவர்.
அழியும் நிலையிலுள்ள கிராமியக் கூத்துக் கலைகளையும் நாடக மரபுகளையும் உலகெங்கும் வாழும் தமிழ் பிள்ளைகளிடம் கொண்டு சேர்ப்பதை இலட்சியக் கனவாகக் கொண்டு, கலைஞர்களின் வாழ்வியலைப் பேசும் வகையில் இந்த ‘கூத்தாடி’ திரைப்படத்தை அவர் தயாரித்துள்ளார்.
தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள தமிழ் ரசிகர்களை, ஈழத்துத் திரைப்படங்களின் பால் ஈர்க்கும் வல்லமையோடு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்தில், மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கொட்டிலில் அமர்ந்து நாடகம் பார்ப்பது போன்ற சுவாரசியமான காட்சியுடன் கதைக்களம் நகர்கிறது.
மலையாள சினிமாக்களுக்கு நிகராக, மிகத் தத்துரூபமான கிராமத்துப் பின்னணியில், உயர்தரமான தொழில்நுட்பத்துடன் இத்திரைப்படம் இயக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்..
மண்ணின் கலைப் பெருமை பேசும் இத்திரைப்படத்தை ஈழத்துத் தமிழர்கள் மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து நமது மண்ணின் மைந்தர்களை ஊக்குவிக்க வேண்டும் என கலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











