சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, சிறுவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இன்று 11.06.2026 மண் முனைப்பற்று பிரதேச பிரிவிலுள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் சிறப்பாக நடைபெற்றன.
பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷண கெளரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கி.விஷ்ணுகாந்த் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு பாலமுனை கடற்கரை முன்றலில் அல்கிதாயா முன் பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வின் போது பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்குமான பல விளையாட்டுக்கள் நடைபெற்றது. இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர். பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அனைத்து முன்பள்ளிகளிலும் இந்நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்ற மை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு என்பது குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான ஒரு பொழுதுபோக்கு செயலாக மட்டுமல்லாது, ஒற்றுமை, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் சமூகத் திறன்களை வளர்க்கும் முக்கியமான கருவியாகவும் காணப்படுகின்றது.
“பிள்ளைப் பருவத்தைப் பாதுகாப்போம்… விளையாட்டை ஊக்குவிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், குழந்தைகள் தினசரி விளையாட்டுகளில் ஈடுபட வேண்டியதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், விளையாட்டுகள் சிறுவர்களின் உடல் வளர்ச்சி, மனநலம், தன்னம்பிக்கை மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.








.jpeg)



.jpeg)










