SIVAKUMAR.M
மட்டக்களப்பு, கல்லடி உப்போடை சிவானந்த தேசிய பாடசாலையில் நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் திரு. S. தயாபரன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 135 மாணவர்களில் 104 பேர் உயர்தரம் கற்பதற்கான தகுதியினைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இதன்படி, பாடசாலையின் ஒட்டுமொத்த சித்தி வீதம் 77.3% ஆகக் காணப்படுகின்றது.
இப்பரீட்சையில் 05 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட (9A) சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்கள் பின்வருமாறு:
ஐ. தக்ஷிதன்
ஜே. சனாலன்
V. விஸ்வஜித்
S. சந்தோஷ்
கே. கர்சஜன்
மேலும், 8A, B சித்தியை மாணவன் R. லுகேஷ் நாத்தும், 8A, C சித்தியை மாணவன் M. சதுர்ஷனும் பெற்றுள்ளனர். அத்தோடு, 7A, 2B சித்திகளை ஐந்து மாணவர்களும், 6A, 3B சித்திகளை இரண்டு மாணவர்களும் பெற்று பாடசாலைச் சமூகத்தால் விழா மேடையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் சாதனைகளைக் பாராட்டினார்கள் .
உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்று, பாடசாலைக்கும் மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் எமது ஊடகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு, இம்முறை பரீட்சையில் எதிர்பார்த்த சித்தி கிடைக்காத மாணவர்கள் எவ்விதத்திலும் மனம் தளரக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். தோல்விகள் யாவும் தற்காலிகமானவையே. முழுமையான ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் மீண்டும் கற்று, அடுத்த வருடம் உயர்தரம் கற்பதற்கான தகுதியினை நீங்கள் உறுதியாகப் பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறோம்.
அன்பான மாணவர்களே, கல்வி என்பது வெறும் மதிப்பெண்களிலோ அல்லது பரீட்சை முடிவுகளிலோ மட்டும் அடங்கிவிடுவதில்லை. அது உங்கள் வாழ்க்கைப் பயணத்தை வழிநடத்தப் போகும் ஒரு கலங்கரை விளக்கம். இன்று நீங்கள் பெற்றுள்ள இந்த வெற்றிகள், உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். ஆனால், இதுவே இறுதியானது அல்ல; உயர்தரக் கல்வி எனும் அடுத்த கட்டப் பயணத்திற்கு இது ஒரு நுழைவாயில் மட்டுமே. இன்னும் பல சிகரங்களை நீங்கள் எட்ட வேண்டும்.
அதேவேளை, பரீட்சையில் சறுக்கல்களைச் சந்தித்தவர்கள் ஒருபோதும் சோர்ந்துவிடாதீர்கள். உலகை வென்ற பல சாதனையாளர்கள் தங்களின் தோல்விகளிலிருந்தே பாடங்களைக் கற்றுக் கொண்டவர்கள். காலமும் வாய்ப்புகளும் இன்னும் உங்கள் கைகளிலேயே உள்ளன. கல்வியை ஒரு சுமையாக எண்ணாமல், உங்களை உயர்த்தும் உன்னத சக்தியாகக் கருதி, தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் பயிலுங்கள். விடாமுயற்சியும், ஒழுக்கமும் உங்களை சமூகத்தில் மிகச்சிறந்த நிலைக்குக் கொண்டு சேர்க்கும். உங்கள் எதிர்காலப் பயணங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்!
Battimedia.lk










































