கிழக்கு பல்கலைக்கழகத்தில் நவீன தொழில்நுட்ப அடைக்காப்பக மையம் திறப்பு: உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குப் புதிய விடிவு!

 

 




 
































































 

 

 


Chief editor-Sivakumar

கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அடைக்காப்பக (Incubation Center) வசதிகளை, பிராந்தியத்திலுள்ள உள்ளூர் தொழில்முனைவோர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நிலையான பொருளாதார வளர்ச்சி, புதுமை மற்றும் தொழில்முனைவோர் ஊக்குவிப்பை இலக்காகக் கொண்டு, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் இணைந்து இந்த மையத்தை நிறுவியுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரால் இம்மையம் நேற்றைய தினம் (04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த அடைக்காப்பக மையமானது; புதிய தொழில்முயற்சியாளர்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SMEs) மற்றும் இளம் உற்பத்தியாளர்களின் வணிகக் கனவுகளை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப மற்றும் உத்திசார் உதவிகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கவுள்ளது. இங்கு பின்வரும் சேவைகள் நேரடியாக முன்னெடுக்கப்படவுள்ளன:

  • விரிவான வணிக வழிகாட்டுதல்: முறையான வணிகத் திட்டமிடல், சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்துவதற்கான வர்த்தக நாம (Branding) ஆலோசனைகள்.

  • தொழில்நுட்ப ஆதரவு: நுகர்வோரை ஈர்க்கும் வகையிலான பேக்கேஜிங் (Packaging), லேபிளிங் மற்றும் தயாரிப்பு சோதனைகளுக்கான வழிமுறைகள்.

  • தரக் கட்டுப்பாடு: உள்ளூர் தயாரிப்புகள் சர்வதேசத் தரத்தில் அமைவதை உறுதிசெய்யும் பொருட்டு, உற்பத்திப் பொருட்களின் தரம் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்தல்.

  • திறன் மேம்பாடு: புதிய தொழில்முயற்சியாளர்களின் வணிக ஆளுமையை வளர்க்கும் நோக்கிலான பிரத்யேகப் பயிற்சித் திட்டங்கள்.

இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளின் தரம் மற்றும் இரசாயனக் கூறுகளைப் பரிசோதிக்க அதிக செலவு செய்து, கொழும்பு போன்ற தூரப் பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.

இதற்குத் தீர்வாக, தற்போதைய அரசினால் பல மில்லியன் ரூபாய் செலவில் நவீன உபகரணங்களுடன் இலங்கையின் 3வது அடைக்காப்பக மையம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் வணிகர்கள் தங்களது சொந்தப் பிரதேசத்திலேயே மிகவும் குறைந்த செலவில் இப்பரிசோதனைகளை இலகுவாகச் செய்துகொள்ள முடியும்.

கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பூங்காவில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவின் போது, உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேகப் பொருட்காட்சி ஒன்றும் அரங்கேறியது.

இந்கழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை. எல். எம். நவவீ ஆகியோருடன் இணைந்து பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பேராசிரியர் கே. பிறேம்குமார், விதாதா நிறுவனப் பணிப்பாளர் மனோஜ் கருணாரத்ன, கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம மற்றும் கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் அமரசிங்கம் பகீரதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்