கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களைச் சர்வதேசச் சந்தைக்கு வழிநடத்தும் நோக்கிலான விசேட விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுச் செயலமர்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் (East Lagoon) விடுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வுக்கு, அச்சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நாடளாவிய ரீதியில் புதிய ஏற்றுமதியாளர்களைக் கண்டறியும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஏழாவது விழிப்புணர்வு நிகழ்வான இச்செயலமர்வு ஐரோப்பிய யூனியன் (EU), குளோபல் கேட்வே (Global Gateway) மற்றும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) ஆகியவற்றின் சர்வதேச அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விசேட பயிற்சியில், கலந்துகொண்ட தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்றுமதித் துறைக்கான தயார்நிலை, சர்வதேச சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் தொழில்முனைவோர் திறன் மேம்பாடு போன்ற மிக முக்கியமான அம்சங்கள் குறித்து விரிவான விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை எதிர்கால உலகளாவிய ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.






