மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கல்விக் கோட்டத்தில் உள்ள 19 பாடசாலைகளில், இந்த ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள சுமார் 380 மாணவர்களுக்கான விசேட வலுவூட்டல் செயலமர்வு 13.06.2026 வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
‘தாயக ஊற்று’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் செயலமர்வு, அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலில் அமைந்திருந்தது.
இதற்கு தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களுமான வைத்தியர் காந்தா நிரஞ்சன் மற்றும் திருமதி சர்மி உதயகுமார் ஆகியோர் நிதி அனுசரணை வழங்கியிருந்தனர்.
இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச் செயலமர்வுகள், மட்/ககு/பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம் மற்றும் மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளில் நடாத்தப்பட்டன.
இங்கு மட்டக்களப்பின் பிரபல கல்வி வளவாளர்களான திரு.கே.ரிசீகரன் மற்றும் திரு.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல்களையும் பரீட்சை எதிர்நோக்கல் பயிற்சிகளையும் வழங்கினர்.
அத்துடன், பங்கெடுத்த மாணவர்களின் கற்றல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த கால வினா-விடை கையேடுகள் மற்றும் கற்றல் கோப்புகள் (Files) என்பன இதன்போது இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் கா.நாகேந்திரன், கோறளைப்பற்று வடக்கு வாகரை கல்விக் கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான வெ.இராஜேந்திரன், ஆசிரியர்கள், வளவாளர்கள், வாகரை பிரதேச சமூக ஆர்வலரும் அமைப்பின் உறுப்பினருமான திரு.குகதாசன், தாயக ஊற்று அமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.




.jpeg)

.jpeg)


.jpeg)



.jpeg)

.jpeg)






