இன்று கொழும்பின் புகழ்பெற்ற காலி முகத்திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு, கலை மற்றும் கலாசார உலகில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.
5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒருங்கிணைந்த முறையில் பரதநாட்டிய அசைவுகளை நிகழ்த்திய இந்த மாபெரும் நிகழ்வு, உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி மற்றும் நிகழ்திறன் சாதனையாக பதிவு செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை இந்தியாவைச் சேர்ந்த சங்கமம் குளோபல் அகடமி மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா ஹொலிடேஸ் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
கின்னஸ் உலகச் சாதனை முயற்சி
இந்த நிகழ்வு, “உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி (Largest Bharatanatyam Lesson)” என்ற பிரிவின் கீழ் கின்னஸ் உலகச் சாதனையாக பதிவு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது. கின்னஸ் உலகச் சாதனை அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ கண்காணிப்பாளர்கள் நிகழ்வை நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான பாரம்பரிய உடைகளில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒருங்கிணைந்து நடனமாடிய காட்சி, காலி முகத்திடலை ஒரு பிரம்மாண்ட கலாசார மேடையாக மாற்றியது. சிறுவர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை பல வயதினரும் இதில் பங்கேற்றனர்.
.
கடந்த காலங்களில் சில அரசியல் வட்டாரங்களில் “இனப் பாகுபாடு”, “தமிழர் ஒதுக்கப்படுகின்றனர்” போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இவ்வாறான பெருமளவிலான தமிழ் கலாசார நிகழ்வுகள் தேசிய மட்டத்தில் நடத்தப்படுவது, நாட்டின் பல இன மக்களும் ஒன்றாக முன்னேற முடியும் என்பதை நினைவூட்டுகிறது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கலை, மொழி, மதம் மற்றும் இன வேறுபாடுகளைத் தாண்டி மக்களை இணைக்கும் சக்தியாக விளங்குகிறது. காலி முகத்திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வு அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த பங்களித்த அனைத்து கலைஞர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவளித்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
“ஒற்றுமையே நாட்டின் பலம்” என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைத்த இந்த நிகழ்வு, வருங்கால சந்ததியினருக்கும் ஒரு ஊக்கமாக அமையும்.






