இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 360 இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தற்போதைய டிஜிட்டல் தளங்களில் பயனர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பாரியளவில் அதிகரித்துள்ளமை இலங்கை கணினி அவசரப் பிரிவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசரப் பிரிவின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல இதனை குறிப்பிட்டுள்ளார்.
பதிவாகியுள்ள இணையவழி மோசடிச் சம்பவங்களில் 14 சம்பவங்கள் சிறுவர்களுடன் தொடர்புடையவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் மற்றும் இணையவழி மோசடிகளுக்கு மத்தியில் சிறுவர்கள் இலக்காக்கப்படுவது பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், 40 வாட்ஸ்அப் கணக்குகள் ஊடுருவப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இது நாடு முழுவதும் உள்ள சமூக ஊடகப் பயனர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இணையவழித் தாக்குதல்களின் வளர்ந்து வரும் போக்கைக் காட்டுகிறது.
இதன் காரணமாக, இணையப் பயனர்கள் அனைவரும் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு இலங்கை கணினி அவசரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதற்கு முன்போ அல்லது இணையவழிப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்போ, சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் லிங்குகளின் நம்பகத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமூக ஊடகக் கணக்குகளின் பாதுகாப்பை பலப்படுத்த இருபடிச் சரிபார்ப்பு போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசரப் பிரிவின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல வலியுறுத்தியுள்ளார்.





