இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய மன்ற நிகழ்வு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களது பங்குபற்றலுடன் மிகவும் கோலாகலமாக திருகோணமலையில் இன்று (06) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இலங்கை மத்தியவங்கியின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தின் முகாமையாளர் கறுப்பையா பிரபாகரன் அவர்களது தலைமையில் இடம் பெற்ற திருகோணமலை பிராந்திய மன்றத்தின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இந் நிகழ்வில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர், மத்திய வங்கியின் உதவி ஆளுநர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றம் அம்பாரை மாவட்டங்களின் மாவட்ட அரசாங்க அதிபர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வங்கிகளின் முகாமையாளர்கள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் மற்றும் நளிவுற்ற மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்காகவே இவ்வாறான பிராந்திய மன்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கு அதிக வளங்களை கொண்ட பிரதேசமாக திருகோணமலை காணப்படுவதாகவும் அதிலும் அதிகமாக சுற்றுலா பயணிகளை கவர்ந்தீர்த்து சுற்றுலா துறை ஊடாக அதிக வருமானத்தை ஈட்டக் கூடிய பிரதேசமாகவும் திருகோணமலை காணப்படுவதா கவும் இதன் போது மத்திய வங்கியின் ஆளுநர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
அதே போன்று இங்கு இடப்பிரச்சனை காணப்படுமாக இருந்தால் காணி அமைச்சும் கைத்தொழில் அமைச்சும் இணைந்து கலந்துரையாடி நல்ல பல முடிவுகளை எட்ட முடியும் என்பதுடன், வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியுடன் கடன்களை பெற்று சுய தொழில் முயற்சியாளர்கள் நன்மையடைய முடுயும் என்றார்.
அதனைத் தொடர்ந்து திறந்த விவாத மேடை ஆரம்பமாகியதுடன் இதன் போது நாட்டின் பொருளாதார போக்கு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் உள்ளிட்ட நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட விடையங்கள் தொடர்பான கேள்விகள் மற்றும் ஆலோசனைகளுக்கான பதில்களையும் தெளிவூட்டல்களையும் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட மத்திய வங்கியின் பிரதி மற்றும் உதவி ஆளுநர்களினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான திட்ட முன்மொழிவொன்று இதன் போது மத்திய வங்கியின் ஆளுநர் அவர்களிடம் மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா உள்ளிட்ட வர்த்த சங்கத்தின் பிரதிநிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், அவற்றில் உள்ளடங்கியுள்ள விடையங்கள் தொடர்பாக சாத்தியவள அறிக்கைகளை பெற்று அவற்றுள் முடியுமானவற்றை மிக விரைவில் செயற்படுத்த முயற்சிப்போம் என மத்திய வங்கியின் ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.













