பேஸ்புக் களியாட்டம் - போதைப்பொருட்களுடன் 3 யுவதிகள் உட்பட 28 இளைஞர்கள் அதிரடியாக கைது .

 


அம்பலாங்கொடை - பொனதூவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பேஸ்புக்  ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டதுடன், 28 பேர் கைது செயப்பட்டுள்ளனர். 

இதன்போது தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 யுவதிகள் உட்பட 28 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் அம்பலாங்கொடை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும்  இணைந்து நடத்திய  விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த களியாட்ட நிகழ்வு முற்றுகையிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 225 மில்லிகிராம் கொக்கெய்ன், 08 கிராம் 125 மில்லிகிராம் ஐஸ், 02 கிராம் 400 மில்லிகிராம் கஞ்சா மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த  வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் படபொல, ஊரகஸ்மன்பா சந்தி, பலபிட்டிய, ஹோமாகம, பேருவளை, அம்பலாங்கொடை, மீடியாகொடை, வத்துகெதர மற்றும் அஹுங்கல்ல ஆகிய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட யுவதிகளும் இளைஞர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர். 


இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.