தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் இன்று (22) தனது 52 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
கடந்த மே 10ஆம் திகதி தமிழகத்தின் 9
ஆவது முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவர் முதல்வராகியப் பின்னர்
கொண்டாடும் முதலாவது பிறந்தநாள் இது என்பதால், அவரது கட்சியினரிடமும்
ஆதரவாளர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரைத்துறையில் இருந்து விலகி, 2024
பெப்ரவரியில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய விஜய்,
அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர்
மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
அதைத்தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின்
ஆதரவோடு மே 10, ஆம் திகதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழகத்தின்
முதலமைச்சராக அவர் பதவியேற்றார்.
முதலமைச்சர் விஜய்யின்
அறிவுறுத்தலின்படி, மாநிலம் முழுவதும் ஆடம்பரமான கொண்டாட்டங்களைத்
தவிர்த்து, ஏழை எளிய மக்களுக்கு உதவும் நற்பணி மன்றச் செயல்பாடுகளில்
ஈடுபடுமாறு கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் தலைமை
நிர்வாகிகள் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனையொட்டி, தமிழகத்தின் பல்வேறு
மாவட்டங்களிலும் தவெக தொண்டர்கள் மற்றும் நற்பணி இயக்கத்தினர் அரச
மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல்,
முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல், மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள்
விநியோகித்தல் போன்ற மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பனையூரில் உள்ள கட்சித்
தலைமையகத்திலும், தலைமைச் செயலகத்திலும் முதலமைச்சருக்கு வாழ்த்து
தெரிவிக்கப் பல்துறைப் பிரமுகர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம்
உள்ளனர்.
இந்தநிலையில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





