A/L பரீட்சைக்கு (2026) தயாராவதற்குப் போதுமான காலம் உள்ளதால், பரீட்சை நடத்தப்படும் திகதிகளில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என கல்வி, உயர்கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள A/L பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலே, கல்வி, உயர் கல்வியமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆசிரியர் வழிகாட்டிக்கு இணங்க, உயர்தரப் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்குத் தேவையான எண்ணிக்கை 300 நாட்களhகவுள்ளன.
2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் உத்தியோபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஓகஸ்ட் 07ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை 343 என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 2026 A/L பரீட்சைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக, கடந்த பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இந்த முறை பரீட்சை நடத்தப்படும் நாள் வரையிலான இடைவெளி 04 மாதங்களும் 10 நாட்களுமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 A/L பரீட்சைக்குத் தயாராவதற்கு போதுமான காலம் கிடைத்துள்ளதால், பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தம் செய்ய வேண்டிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்றும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.





