உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று (01.06.2026) சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு.

 

 








































உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று 1.6.2026  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  பணிமனையில்  பணிப்பாளர்  வைத்திய கலாநிதி  டாக்டர். ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வானது தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர். ம. ருதேஷன்  அவர்களின் ஒருங்கமைப்புடன் நடை பெற்றது.      

இதில்   அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரியான திரு தினேஷ் ,  மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், வின்சென்ட் உர்தர பாடசாலை சாரணீய மாணவி எஸ். ஸ்ருதி ,  சமூக அமைப்புகள் மற்றும் அலுவலக உத்தியாகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


 பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் 
 உரையில் புகைத்தலைக் கட்டுப்படுத்துவதன் அவசியம், அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள், மற்றும் புகையிலை ஒழிப்புப் பணிகளில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தினார். குறிப்பாக மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மாவட்டத்தில் புகைத்தல் அற்ற சூழலை உருவாக்க அனைவரின் பங்களிப்பும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் பிரதிநிதி ஒருவரும் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பாவனையின் தீமைகள் குறித்து உரையாற்றினார். இளைஞர் தலைமுறையினரை இவ்வாறான தீய பழக்கவழக்கங்களிலிருந்து பாதுகாப்பதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து செயற்படும் தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கல்லடி போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு அதிகாரியுமான திரு பி. டினேஷ் அவர்கள்  தனது உரையில் தற்போதைய புகையிலைப் பாவனையின் நிலைமை, அதனுடன் தொடர்புடைய புள்ளிவிவரங்கள், சமூக மற்றும் சுகாதார பாதிப்புகள், புகையிலை நிறுவனங்கள் பயன்படுத்தும் விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள், மற்றும் இளம் தலைமுறையினரை குறிவைக்கும் தந்திரோபாயங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

அத்துடன், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை புகையிலைப் பாவனையிலிருந்து பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார். மேலும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை சூழவுள்ள பகுதிகளை புகைத்தல் அற்ற பகுதிகளாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியில், மட்டக்களப்பு மாநகரமும் மாவட்டமும் புகைத்தல் அற்ற ஆரோக்கியமான சமூகமாக மாற்றப்படுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பொதுமக்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக வர்த்தக சங்கங்கள், கல்வித்துறை, பாடசாலை நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என வலியுறுத்தப்பட்டது.

"புகையிலை அற்ற சமூகமே ஆரோக்கியமான எதிர்காலத்தின் அடித்தளம்" என்ற செய்தி இந்நிகழ்வின் ஊடாக வலியுறுத்தப்பட்டது.

 ------------------------------------------------------------------------------------------------------------------------------

புகையிலை ஒழிப்பு சம்பந்தமாக சில பரிந்துரைகளை  battimedia ஊடகம் முன்வைக்கிறது .

   "புகையிலைக் கட்டுப்பாட்டை வெறும் சட்டத்தால் மட்டுமே சாதித்துவிட முடியாது. எனவே, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சிகரெட் வர்த்தகர்களை நேரடியாக அழைத்து, சிகரெட் விற்பனையைக் கூடியமட்டும் கட்டுப்படுத்துமாறும், இளம் வயதினருக்கு அதனை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் மனிதநேய அடிப்படையில் அவர்களிடம் உருக்கமான வேண்டுகோள்  விடுக்கலாம்.

வெறும் உரைகளுடன் மட்டுப்பட்டுவிடாமல், புகையிலை ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற பின்வரும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் .

    திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் குறும் திரைப்படங்கள்:


    புகைப்பதால் ஏற்படும் உடல், பொருளாதார மற்றும் குடும்ப அழிவுகளை தத்ரூபமாக விளக்கும் குறும் திரைப்படங்களை (Short Movies) தயாரித்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப்படுத்துதல். குறிப்பாக, மட்டக்களப்பில் உள்ள திரையரங்குகளில் (Movie Theaters) படம் தொடங்குவதற்கு முன்னரும், இடைவேளையின் போதும் இவற்றைத் திரையிடுவதற்குரிய உத்தியோகபூர்வ ஆவணச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

    பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் மூலம் மாணவர்களிடையே தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ளுதல்.

 பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையைச் சூழவுள்ள பகுதிகள் அனைத்தும் முழுமையாக புகைத்தல் அற்ற வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வுப் பலகைகள் நாட்டப்படவேண்டும் 

. வர்த்தக சங்கங்கள், கல்வித்துறை, பாடசாலை நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரின் கூட்டு உழைப்பும் இதற்கு இன்றியமையாததாகும்.