மட்டக்களப்பு புதூரில் சோகம்: மோட்டார் சைக்கிள் வாவியினுள் கவிழ்ந்து 20 வயது இளைஞன் பரிதாப மரணம்!

 


SIVAKUMAR 

 மட்டக்களப்பு, புதூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 20 வயதுடைய இளம் குடும்பஸ்தர்/இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் மட்டக்களப்பு, திருப்பெருந்துறை 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த கதிர்செல்வன் பரமநாதன் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

சம்பவ தினமான நேற்று மாலை 4.30 மணியளவில், உயிரிழந்த இளைஞன் திருப்பெருந்துறை நோக்கிச் செல்லும் வீதியில் தனது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றுள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, தடம்புரண்டு அருகில் இருந்த வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது

.விபத்து இடம்பெற்ற உடனே, அருகில் இருந்த விமானப்படை முகாம் சிப்பாய்களும் அப்பகுதி பொதுமக்களும் விரைந்து செயல்பட்டு, வாவிக்குள் மூழ்கியிருந்த இளைஞனைப் போராடி மீட்டெடுத்தனர்.

அதிதீவிர சிகிச்சைகளுக்காக அவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி அந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூகப் பொறுப்புடன் ஒரு வேண்டுகோள்

 "அதிவேகம் ஆபத்தானது." நமது ஊர் இளைஞர்கள் வாகனங்களைச் செலுத்தும்போது வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாகப் பயணிக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஒரு சிறிய கவனக்குறைவு ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுகிறது. பாதுகாப்பாகப் பயணிப்போம்!