சக்தி TV-யின் விவாதப் போட்டி: தேசிய மட்டத்தில் மகுடம் சூடத் தயாராகும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை!

 



SIVAKUMAR. CHIEF EDITOR 

சக்தி TV நிறுவனத்தினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் “சொற்களின் சிம்மாசனத்தை ஆளப்போவது யார்?” என்ற புகழ்பெற்ற விவாதப் போட்டியில், மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை முதற்கட்டத் தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளது.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 400-க்கும் மேற்பட்ட முன்னணிப் பாடசாலைகள் பங்குபற்றிய இந்த பிரம்மாண்ட விவாதப் போட்டியின் முதற்கட்டத் தேர்வுகளில் இருந்து, மிகக் கடுமையான போட்டிக்கு மத்தியில் 36 பாடசாலைகள் மாத்திரமே அடுத்த சுற்றுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த 36 பாடசாலைகளுள் ஒன்றாக மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையும் உள்வாங்கப்பட்டு, தேசிய மட்டத்தில் மீண்டும் தனது பாடசாலையின் பெயரைப் பறைசாற்றியுள்ளது.

சாதனை படைத்த மாணவர்கள்

பாடசாலைக்கு பெருமை சேர்த்த விவாதக் குழுவில் பின்வரும் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்:

  • செல்வன் A. அட்சரன்

  • செல்வன் T. யோபு

  • செல்வன் P. அகிலேஷ்

  • செல்வன் U. பிரபஞ்சன்

இப்போட்டியில் விவாதக் குழுவினரின் சிறப்பான கூட்டுமுயற்சி பாராட்டப்பட்டதோடு, குறிப்பாக மாணவன் செல்வன் அகிலேஷ் அவர்களின் தனித்துவமான விவாதத் திறமை, அன்றைய தினத்தின் பெரும்பாலான நடுவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மாணவர்களின் இந்த வெற்றிக்காக அவர்களை மிகச் சிறந்த முறையில் நெறிப்படுத்தி, வழி நடத்திய ஆசிரியை திருமதி அருணா சிந்துஜன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன், தற்போது இப்பாடசாலையில் கடமையாற்றாவிட்டாலும், கடந்த காலங்களில் இந்த மாணவர்களின் விவாதத் திறனை வளர்த்தெடுப்பதிலும், அவர்களை ஆளுமையுள்ளவர்களாக உருவாக்குவதிலும் பெரும் பங்களிப்பினை வழங்கிய ஆசிரியைகளான திருமதி துஷிகா ஜனமோகன் மற்றும் திருமதி தர்ஷினி ரகுநாதன் ஆகியோரின் சேவைகளும் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூரப்பட்டுள்ளன.

இம்மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் விளங்கிய பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வாழ்த்துகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. அடுத்த சுற்றிலும் சிவானந்தா தேசிய பாடசாலை வெற்றிபெற்று “சொற்களின் சிம்மாசனத்தை” ஆள வேண்டும் என பிராந்திய ஊடகங்களும், சிவானந்தா    பாடசாலை சமூகமும்    வாழ்த்துகின்றன.