மட்டக்களப்பில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, நச்சுப் புகையைச் சுவாசித்து இரண்டு சிறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் 5 மற்றும் 3 வயதுடைய இரு குழந்தைகளே பலியாகியுள்ளனர்.
பதுளைப் பகுதியிலிருந்து மருத்துவத் தேவைக்காக மட்டக்களப்புக்கு வந்திருந்த குடும்பமொன்றே இந்த விடுதியில் தங்கியிருந்துள்ளது. சம்பவத்தன்று, குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தந்தை தங்கியிருந்த விடுதி அறையைப் பூட்டிவிட்டு வெளியே உணவு வாங்கச் சென்றுள்ளார்.
அவர் வெளியில் சென்றிருந்த வேளையில், அறையிலிருந்த மெத்தை திடீரென தீப்பற்றியுள்ளது. அறை பூட்டப்பட்டிருந்ததால், தீயினால் ஏற்பட்ட நச்சுப் புகை அறை முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாகவே குழந்தைகள் இருவரும் அறையினுள்ளேயே உயிரிழந்துள்ளனர் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கோர விபத்து குறித்து மட்டக்களப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg)
.jpeg)






