பெற்றோரை இலக்கு வைத்து விழிப்புணர்வு திட்டங்களை நடத்த அரசாங்கம் ஆலோசனை!.

 


சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் திரை அடிமைத்தனம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், பெற்றோரை இலக்கு வைத்து விழிப்புணர்வு திட்டங்களை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் அவதானிக்கப்பட்டதாக ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில் டிஜிட்டல் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச சிறுவர் நல அமைப்புகளும் பங்கெடுத்திருந்தன.

பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன மேலும் குறிப்பிட்டதாவது,

பல பெற்றோர்கள் தங்களது அன்றாட வீட்டு வேலைகளைச் செய்யும்போது, தங்களது பிள்ளைகளை அமைதியாக வைத்திருக்க அல்லது அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்.

தங்களின் வசதிக்காக மிகச் சிறிய வயதிலேயே பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதால், பிள்ளைகள் படிப்படியாகத் திரைகளுக்கு அதிகளவில் அடிமையாகும் நிலை ஏற்படுகிறது.

எனவே, இந்த விழிப்புணர்வு திட்டங்கள் சிறுவர்களை விடவும் பெற்றோரை வழிநடத்துவதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் திரை அடிமைத்தனம் அதிகரிப்பதற்குக் பெற்றோரின் இந்த அணுகுமுறையே மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடு இல்லாமல் ஸ்மார்ட்போனகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், அவர்கள் தீங்கு விளைவிக்கும் இணையவழி உள்ளடக்கங்கள், சுரண்டல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் பெரும் அபாயம் உள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன மேலும் எச்சரித்துள்ளார்.